**சென்னகுணம் உழவர் கூட்டம்**



இயற்கை வேளாண்மையைப் பரப்பும் விழைவுடன் விழுப்புரம் மாவட்டம், சென்னகுணம் கிராமத்தில் ஜூலை மாதம் முதல் தேதி உழவர் கூட்டம் ஒன்று நடத்தப் பட்டது.இயற்கை விவசாயத்திற்கு மாறும் நோக்கத்துடன் இதில் 40க்கும் மேற்பட்ட உழவர்கள் கலந்து கொண்டனர். தற்சார்பு இயக்கத்தின் களப் பணியாளாரும், விழுப்புரம் மாவட்டத்தின் பொறுப்பாளருமான திருமதி. குமாரி. பல நாட்கள் தொடர்ந்து, சென்னகுணம்-புரவடை, காரணை-பெருச்சானூர், இருந்தை ஆகிய மூன்று கிராமங்களில் விவசாயிகளைச் சந்தித்துப் பேசி சிறந்த முறையில் களப்பணி ஆற்றியதன் பயனாக உருவானதுதான் இந்த சந்திப்பு.



இதில் தற்சார்பு இயக்கத்தின் சார்பாக சூர்யா மற்றும் உழவன் பாலா ஆகியோர் கலந்து கொண்டனர். CARE தொண்டு நிறுவனத்தின் சார்பாக திரு. எம் .சிவலிங்கம் மற்றும் APWS தொண்டு நிறுவனத்தின் சார்பாக எம்.எஸ்.குமார். சென்னகுணம் ஊராட்சி ஒன்றிய தலைவர்,ஓய்வு பெற்ற‌ ஆசிரியர் - திரு.மயிலி கலியன் , ஆகியோர் கலந்து கொண்டனர். மூன்று மணிநேரம் நடந்த இந்தக் கருத்துப் பரிமாறலில், ஏன் இயற்கை வேளாண்மைக்கு மாற வேண்டும், அதற்கு உள்ள தடைகள் என்ன, மாறும் பொழுது ஏற்படும் தாற்காலிக இழப்பைச் சமாளிப்பது எப்படி, விதைகளுக்கு என்ன செய்வது, இயற்கை வேளாண்மைக்கான தொழில் நுட்பங்கள் என்ன என்று பலவும் நடைமுறை நிதர்சனங்களுடன் விவாதிக்கப் பட்டன. ஏற்கனவே மயிலாடுதுறையைச் சேர்ந்த இயற்கை விவசாயி திரு.ராம்வேல் அவர்களின் பண்ணைக்குச் சென்று அவரின் இயற்கை வழிக் கரும்பு மற்றும் நெல் சாகுபடித் தொழில்நுட்பங்களைக் கண்ட விவசாயிகள் இயற்கையில் முதலில் கொஞ்சம் மெனெக்கெட்டால் பின் எளிதில் வெல்லலாம் என்ற கருத்தைக் கூறினர். இயற்கை வழிப் பூச்சிக்கட்டுப்பாடும், உரத் தேவையை நிறைவு செய்வதும் உழவர்களின் முக்கியமான கவலைகளாக வெளிப்பட்டன.

இருந்தை கிராமத்தைச் சேர்ந்த திரு. மரிய கொழுந்துராஜ், தன் இயற்கை விவசாய அனுபவங்களையும், அதனால் ஏற்படும் இடுபொருள் செலவுக் குறைப்பு பற்றியும் , இதனால் உழவன் கடனில் இருந்து விடுபடுவது எளிது என்றும் உதாரணங்களுடன் எடுத்துக் கூறினார்.

:img0024a.jpg|


சென்னகுணம் தலைவர் திரு.மயிலி கலியன் பேசும் பொழுது, ஆற்று வண்டலை அரசு எடுக்க விடாத சூழ்நிலையைப் பற்றிக்கூறி, நம்மைச் சுற்றியுள்ள இயற்கை வளங்களை நாம் பயன்படுத்த இயலாத அரசியல், சட்டச் சிக்கல்களைப் பற்றிக் கூறினார். திரு. சிவலிங்கம் பேசுகையில், மரங்களின் அவசியத்தையும், பசுந்தாள்,தழை உரங்கள் எப்படி உபயோகிப்பது என்பதும் உழவர்கள் சங்கங்கள் அமைக்க வேண்டியிருப்பதைப் பற்றியும், கூட்டுறவின் முக்கியத்துவையும் பற்றிக் கூறினார்.

சுமார் மூன்று மணி நேர கலந்துரையாடலுக்குப் பின் 21 விவசாயிகள் சோதனை முறையில் இயற்கை வேளாண்மை செய்வதாக உறுதி அளித்துள்ளனர். வரகு, துவரை மற்றும் இயற்கை வழிச் சாகுபடிக்காக கிச்சடி சம்பா, சீரகச் சம்பா நெல் ஆகியவற்றை நடுவதாகத் திட்டமிடப்பட்டது. இதற்குத் தேவையான விதைகளைத் தற்சார்பு இயக்கம் பணம் ஏதும் வாங்காமல் கொடுத்துப் பின் அறுவடைக்குப் பின் இருமடங்காகத் திருப்பித் தரவேண்டும் என்ற திட்டத்தை அளித்துள்ளது.

விதை கொடுப்போம் என்றதும், இடையில் சில உழவர்கள் நம் இயக்கத்தை ஒரு வியாபாரியைப் போல எண்ணிக் கொண்டு 'நீங்கள் என்ன விலைக்கு இயற்கைப் பொருட்களை வாங்கிக் கொள்வீர்கள்?' என்று வினவினர். எந்த நிதி உதவியும் பெறாத ஒரு சார்பற்ற இயக்கம் தற்சார்பு இயக்கம் என்றும் விளை பொருட்களை உழவர்கள் எங்கு வேண்டுமானாலும் யாரிடம் வேண்டுமானாலும் விற்றுக் கொள்ளலாம் என்றும் நாங்கள் விளக்க வேண்டியதாயிற்று! லாப நோக்கு இல்லாத செயலுக்கு மக்கள் மத்தியில் பெறும் நம்பிக்கையின்மை இருப்பதைக் கண்ட போது காந்தி, குமரப்பா எல்லாம் வாழ்ந்த மண்தானா இது என்ற வேதனை தோன்றியது.

21 விவசாயிகளுடன், 24 ஏக்கரில் திட்டமிடப் பட்டுள்ள இம்மாற்றம் ஒரு மௌனப் புரட்சியின் ஆலம் விதையாகும் என்று நாம் நம்புகிறோம்.